தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களிலும் மழை பெய்து வருவதால் ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் மாணவ மாணவிகள் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக பள்ளி வகுப்பறைகள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் பள்ளிகளில் எந்த வித மின்கசிவும் ஏற்படாத வகையில் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் மரம் விழும் நிலையில் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் பள்ளிகளில் தேங்காத வண்ணம் சரி செய்ய வேண்டும். பள்ளிகளில் பயன்படுத்தாமல் இருக்கும் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை மூடி வைக்க வேண்டும் எனவும் மழைக்காலங்களில் தொற்று நோய்கள் அதிகமாக பரவும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.