தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பருவ மழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து பருவ மழையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர நலவாழ்வு மையங்களில் தேவையான மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். அதோடு மழை நீர் போகாதவாறு‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் டெங்கு பரவலை கண்காணிக்க கொசு ஒழிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.