ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு அரசியலில் நுழைந்த துரை வைகோவிற்கு கட்சிக்குள் செல்வாக்கு இல்லை.

இந்த நிலையில்தான் மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பியுள்ளார். மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என அந்த கடிதத்தில் கூறியுள்ள திருப்பூர் துரைசாமி, மகனை (துரைவைகோ ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என கூறியுள்ளார்.