தமிழகத்தில் புதிதாக 500 அங்கன்வாடிகள்  அமைக்கப்படும் என சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த அங்கன்வாடி மையங்கள் தனியார் பள்ளிகளையே மிஞ்சும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வைப்பதன் மூலம், குழந்தைகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17,312 சத்துணவு மையங்களுக்கு 25. 70 கோடியில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், சத்துணவு திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் 50 லட்சம் செலவில் இணையதள முகப்பு மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்படும் என்றார்.