
போபாலில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்திய நுகர்வோருவரிடம், ஒரு பாட்டில் குடிநீருக்காக சட்ட விரோதமாக ரூ.1 GST வசூலிக்கப்பட்டதற்காக, போபால் நுகர்வோர் மன்றம் உணவகத்திற்கு ரூ.8,000 இழப்பீடு செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
அதாவது ஐஸ்வர்யா என்ற நபர் தனது நண்பர்களுடன் போபாலில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்தினார். அப்போது ரூ.20 MRP கொண்ட குடிநீர் பாட்டிலுக்காக, ரூ.29 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது, இதில் ரூ.1 GST என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து ஐஸ்வர்யா அதற்கெதிராக எதிர்ப்பு தெரிவித்த போது, உணவக ஊழியர்கள் இது சட்டபூர்வமான கட்டணமாகும் என கூறி, பணத்தை திருப்பித் தர மறுத்தனர்.
இந்த விவகாரத்தில் நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதில், உணவகத்தின் தரப்பு “ஏசி வசதி, மேசை சேவை போன்ற வசதிகளுக்காக கூடுதல் கட்டணம்” வசூலிக்கப்படுவதாக பதிலளித்தது. எனினும், நுகர்வோர் மன்றம், குடிநீர் பாட்டிலின் MRP-வில் ஏற்கனவே GST உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதால், கூடுதலாக ரூ.1 வசூலிப்பது சேவை குறைபாடாகும் என்று தீர்மானித்தது.
அதன்பேரில், உணவகத்தை ரூ.1 திருப்பித் தர உத்தரவிட்டதோடு, மன வேதனைக்காக ரூ.5,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.3,000 வழங்க உத்தரவிட்டது. மொத்தமாக ரூ.8,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, நுகர்வோர் உரிமைகள் மீறப்படும் ஒவ்வொரு இடத்திலும் சட்டம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.