ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்குச் சென்ற கேத்தே பசிபிக் விமானத்தில் பயணித்த 3 வயது குழந்தைக்கு, தண்ணீருக்கு பதிலாக வெள்ளை ஒயின் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் பயணித்த குழந்தைக்கு, இரவு உணவு நேரத்தில் தண்ணீர் என நினைத்து, பணிப்பெண்கள் மதுவை பரிமாறியதை பெற்றோர் உடனடியாகக் கவனித்தனர். குழந்தை ஒரு சிப் குடித்தவுடன், “இது கசப்பாக இருக்கிறது” என்று கூறியதால் உண்மை தெரியவந்தது.

விஷயத்தை உணர்ந்த பெற்றோர், உடனே விமான பணிப்பெணிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் குழந்தையை விமானத்தில் உள்ள மருத்துவக் குழு பரிசோதித்து, தீவிர பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தியது.

முதற்கட்டத்தில் விமான நிறுவனம் இந்த தவறை அலட்சியமாக எடுத்துக்கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், சமூக வலைதளங்களில் சம்பவம் பரவியவுடன், விமான நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியது.

தவறை ஒப்புக்கொண்ட கேத்தே பசிபிக் நிறுவனம், குழந்தையின் டிக்கெட்டுக்கான பணத்தைத் திருப்பித் தந்து, கூடுதலாக மூன்று இலவச வகுப்பு மேம்படுத்தல் வவுச்சர்களை வழங்கும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தேவையான மருத்துவச் செலவுகளையும் நிறுவனமே ஏற்கும் என்றும் உறுதியளித்துள்ளது. இதேபோன்று அலட்சியங்கள், சிறிய தவறாகக் கருதப்பட முடியாது என்பதையும், விமானப் பணியாளர்களின் கவனக்குறைவு குழந்தைகளின் பாதுகாப்பை பாதிக்கக் கூடும் என்பதையும் இந்த சம்பவம் தெளிவாக காட்டுகிறது.