தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு திடீரென விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் லங்காவி தீவில் ஸ்கூட்டர் போட் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் ஆண்டனி ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அப்போது திடீரென விபத்து ஏற்பட்டதால் விஜய் ஆண்டனி தண்ணீருக்குள் தவறி விழுந்துள்ளார்.

அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் துணை ஒளிப்பதிவாளர் ஒருவர் தண்ணீருக்குள் குதித்து நடிகர் விஜய் ஆண்டனியை காப்பாற்றியுள்ளார். அப்போது விஜய் ஆண்டனி மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு விஜய் ஆண்டனி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் நடிகர் விஜய் ஆண்டனி நலமுடன் இருப்பதாக தற்போது ஒரு ட்வீட் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் விஜய் ஆண்டனி விரைவில் குணமடைந்து நலமுடன் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.