தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 11 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு தவணை தடுப்பூசியே தவற விட்ட ஐந்து வயது உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் 60 ஆயிரம் பேர் உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில் முதல் கட்ட முகாம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட முகாம் செப்டம்பர் 11 முதல் 16ஆம் தேதி வரையும் மூன்றாம் கட்ட முகாம் அக்டோபர் 9 முதல் 14ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.