அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தனது மிகப்பெரிய உள்நாட்டு திட்டமான வரி குறைப்பு மசோதாவுக்கு கையெழுத்திட்டார்.

இந்த மசோதா மூலம் டிப்ஸ் மற்றும் ஓவர்டைம் சம்பளங்களுக்கு வரி விலக்கு அளிப்பது போன்ற பல நன்மைகள் இருந்தாலும், சமூக நலத்திட்டங்களில் கடுமையான நிதிக் குறைப்புகள் செய்யப்படுவதாக எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக மெடிகெய்டு, உணவுப் பத்திர திட்டங்கள் போன்றவை குறைக்கப்படும் என்ற நிலையில், இது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், ட்ரம்பின் முன்னாள் ஆதரவாளருமான எலோன் மஸ்க், “அமெரிக்கா கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடகத் தளமான X-இல் பதிவிட்டதன்படி, “இன்று உங்கள் சுதந்திரத்தை மீட்டெடுக்க ‘அமெரிக்கா கட்சி’ உருவாக்கப்படுகிறது” என்றார். மேலும், “ஒரே கட்சிச் சனநாயகம் இல்லாத அமைப்பில்தான் நாம் வாழ்கிறோம்” என அவர் தனது அதிரடி வரிகளை பதிவு செய்துள்ளார். இவரது கருத்துக்கணிப்பில், 65% பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மஸ்க் கூறியுள்ளார்.

“>

 

இந்த கட்சி 2026 இடைக்காலத் தேர்தலையோ, 2028 ஜனாதிபதி தேர்தலையோ குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

ட்ரம்பின் “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” என்ற மசோதா தேசிய கடனில் 3.4 டிரில்லியன் டாலர் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மஸ்க், தற்போது ஒரு மாற்றுக் அரசியல் சக்தியாக உருவெடுக்க முயல்கிறார். ட்ரம்புடன் ஏற்பட்ட இந்த அரசியல் பிளவு டெஸ்லா பங்குகளில் கூட கடுமையான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் தற்போது வரை சட்டப்பூர்வமாக கட்சி பதிவு செய்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை.