சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் பயன்படுத்தாத கட்டிடங்களை இடிக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் சிக்கிய பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னையில் கட்டிடங்களை இடிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கட்டிடம் இடிக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிமையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பணியின் போது எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலகைகளை முறையாக பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். பணிகள் முடிவடைந்த உடன் கட்டிடத்தின் உரிமையாளர் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும். இந்த தகவலின் பெயரில் மாநகராட்சி உதவி பொறியாளர் அங்கு சென்று நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றாமல் கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.