உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா செக்டர் 36-ல் வசித்து வரும் தல்ஜித் சிங் என்பவர், ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். விவாகரத்து பெற்ற தல்ஜித் சிங், தனக்கு துணையொருவரைத் தேடி, ஒரு டேட்டிங் செயலியில் பதிவு செய்திருந்தார். அப்போது ஹைதராபாத்தை சேர்ந்த அனிதா என்ற பெயரில் உள்ள ஒரு இளம்பெண் அவரிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

இருவரும் ஒரு வருடமாக தொலைபேசியில் தொடர்ந்து பேசி வந்தனர். நெருக்கம் அதிகரித்த நிலையில், அந்த பெண் வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளார். தொடக்கத்தில் ரூ.3.2 லட்சம் முதலீடு செய்த தல்ஜித் சிங், அதற்கு ரூ.24,000 லாபம் பெற்றார். இதனால் தன்னுடைய வாழ்நாள் சேமிப்பாக இருந்த ரூ.4.5 கோடியை முதலீடு செய்துள்ளார்.

இதேபோன்று ரூ.2 கோடி கடன் வாங்கியும், மொத்தமாக ரூ.6.5 கோடி வரை முதலீடு செய்தார். ஆனால், பின்னர் அவர் முதலீடு செய்த வர்த்தக தளங்களில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, ரூ.61 லட்சம் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதனால் கடும் சந்தேகமடைந்த தல்ஜித், சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

சைபர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “அனிதா” என்ற பெயரில் டேட்டிங் ஆப்பில் உருவாக்கப்பட்ட கணக்கு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தல்ஜித் சிங் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் மற்றும் டிஜிட்டல் வழிமுறைகள் குறித்து தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.