புதுச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஹைட்ரோ குளோரிக் திரவத்தை ஏற்றி கொண்டு கடந்த 17-ஆம் தேதி லாரி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆரோக்கியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல 40 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதில் அனில் ரெட்டி என்பவர் கிளீனராக இருந்தார்.

இந்நிலையில் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திராவகம் ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் சுற்றுலா பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அனில் ரெட்டி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் இருந்த பத்மாவதி, காசியம்மாள், வெங்கட் ராவ் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே லாரியின் டேங்க் சேதமாகி திராவகம் சாலையில் கொட்டி புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பேருந்தில் இருந்த 10 பேருக்கு மயக்கம், மூச்சு திணறல் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் திராவகத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து புகை மூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.