மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த சமீரா பாத்திமா என்பவர், தனது திருமணங்களை வணிகமாக மாற்றி பலரை ஏமாற்றி பணத்தை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியையாக பணியாற்றி வந்த சமீரா, இதுவரை 8 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் பெரும் தொகை பணங்களை பறித்துள்ளார். இவரது மோசடி செயல்கள் குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த ஜூலை 29ஆம் தேதி சமீரா கைது செய்யப்பட்டுள்ளார்.
பணக்காரர்கள் மற்றும் ஏற்கனவே திருமணமான ஆண்களை சமீரா ஏமாற்றியுள்ளார். சமூக வலைதளங்கள் மற்றும் திருமண இணையதளங்கள் மூலம் அவர்கள் தொடர்பை ஏற்படுத்தி, உண்மையான காதல் போல நடித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சில மாதங்களில் அவர்களிடமிருந்து பணம் பறித்து, திருமணத்தை முறித்து விட்டு ஓடி மறுமணம் செய்யும் செயல்களை தொடர்ந்துள்ளார்.
சமீரா கடந்த 15 ஆண்டுகளில் ஒருவரிடமிருந்து ரூ.50 லட்சம் மற்றும் மற்றொருவரிடம் இருந்து ரூ.15 லட்சம் எனக் கணக்கற்ற அளவில் பணத்தை பறித்துள்ளார். ஏமாற்றப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். தற்போது, சமீரா இன்னொரு ஆணுடன் 9-வது திருமணத்திற்கு தயாராகி வந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீராவுடன் இணைந்து பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபட்ட குழுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீராவிடம் இருந்து மேலும் பல மோசடியான விவரங்கள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால், இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
