உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், துப்புரவு பணியில் ஈடுபட்ட நரேஷ் குமார் (வயது 40) என்ற தொழிலாளி, வடிகால் சுத்தம் செய்யும் வேளையில் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கியது சாதாரண பாம்பு என்றாலும், அச்சமின்றி அந்த பாம்பை குச்சியால் பிடித்து, பையில் போட்டுக் கொண்டு நேரடியாக மருத்துவமனை சென்ற அதிரடி செயல், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனைக்கு வந்த நரேஷ், “இந்த பாம்புதான் என்னைக் கடித்தது, தயவுசெய்து சிகிச்சை அளியுங்கள்” என கேட்டுள்ளார். பாம்பை கண்ட மருத்துவர்கள் சில நிமிடங்கள் குழப்பத்தில் இருந்தபோதும், உடனடியாக சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு, நரேஷின் உடல்நிலை சரியாக, பாம்பு விஷமற்றது என உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அமாவதா கிராமம் மற்றும் அஜித்மால் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நேரத்தில் தைரியத்துடன் நடந்துகொண்ட நரேஷின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், மருத்துவர் விளக்கம் அளிக்கையில், “மழைக்காலங்களில் பாம்பு கடித்தல் அதிகம். ஆனால், எல்லா பாம்புகளும் விஷம் உள்ளவை அல்ல. பொதுவாக நேரத்தில் சிகிச்சை அளித்தால் உயிரை காப்பாற்ற முடியும்” என தெரிவித்துள்ளனர்.