ஈரோடு மாவட்ட ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரயில் டிரைவர்கள் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு அந்த அலுவலகம் அருகே இருக்கும் 80 அடி உயர மின்விளக்கு டவரில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஏறினார். இதனை பார்த்த ரயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என நினைத்தனர். சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு கூறினர். அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சனைகள் இருப்பதாகவும் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் சர்ச் பாதிரியாரை வர சொல்லுங்கள் அவர் வந்தால் தான் கீழே இறங்குவேன் என கூறியுள்ளார். போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். அவர் உண்மையான பாதிரியார் இல்லை என்பதை தெரிந்து கொண்ட வாலிபர் மீண்டும் டவர் மீது சென்றார். இரவு 12 மணி வரை இந்த போராட்டம் தொடர்ந்தது. பின்னர் நள்ளிரவு 2. 45 மணியளவில் வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அந்த வாலிபர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் என்பது தெரியவந்தது. அவர் கேரளாவில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக ரயிலில் ஏறி வந்துள்ளார். அதன்பிறகு வழி தவறி ஈரோட்டில் இறங்கியது தெரியவந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். சுமார் 13 மணி நேரம் அந்த வாலிபர் போக்கு காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.