ஜெயலலிதா இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட அவருடைய நினைவு எப்போதும் எல்லோருடைய மனதிலும் இருக்கும் என்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ.தீபாவின் அழைப்பை ஏற்று வந்தேன். இங்கு நான் வந்தது இது நான்காம் முறை.

1977 ஆம் ஆண்டு அவரைப் பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறியிருந்தார். அந்த சமயத்தில் தான் ஜெயலலிதாவை சந்திக்க வந்திருந்தேன். இரண்டாம் முறையாக ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவிற்கு அழைக்க வந்திருந்தேன். அதன் பிறகு மூன்றாம் முறை என் மகள் திருமணத்திற்காக அழைக்க வந்தேன். இப்போது நான்காம் முறை இங்கு வந்துள்ளேன். ஜெயலலிதா இங்கே இல்லை என்று சொன்னாலும் கூட அவருடைய நினைவு எப்போதும் எல்லோருடைய மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில் அஞ்சலி செலுத்தி அவருடைய இனிப்பான மற்றும் சுவையான நினைவுகளோடு செல்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துச் சென்றார்.