தமிழகத்தில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்குவது மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது போன்றவற்றில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு வருடத்திற்கு 156 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் அதிகம். அதோடு மாடுபிடி வீரர்களும் அதிகம். இது தவிர பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காளைகள் கொண்டுவரப்படுவதால் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களை வெற்றிலை பாக்கு கொடுத்து புதுக்கோட்டையில் வரவேற்பார்கள்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை நல வாரிய ஆய்வுக் குழு உறுப்பினர் மிட்டல் ஆய்வு மேற்கொண்டார். இவர் தன்னுடைய ஆய்வுக்கு பிறகு இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் 140 பேர் காயமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலியாகியதோடு நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றவில்லை எனவும் மிட்டல் கூறியுள்ளார். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாததன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் மிட்டல் கூறியுள்ளார்.