
இந்தியா, ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த தகவலை உறுதி செய்தார். தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது எனவும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய முனையமாகவும் விளங்குவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிற்கு முன்னால் தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே உள்ளன. இந்தியா தனது தற்போதைய வளர்ச்சி பாதையைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால், 2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என நிதி ஆயோக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
IMF வெளியிட்டுள்ள ஏப்ரல் 2025 உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், 2026 நிதியாண்டில் இந்தியாவின் GDP 4,187 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஜப்பானின் GDP 4,186 பில்லியன் டாலராகவே இருக்கும்.
2025-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.2% என்றும், 2026-ல் 6.3% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. இதே நேரத்தில், உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் முறையே 2.8% மற்றும் 3% என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் காணப்படும்.
நாட்டின் வளர்ச்சி தொடர்பான முக்கிய பகுதிகள் – உற்பத்தி, சேவைகள், நகர்ப்புற மற்றும் பசுமை பொருளாதாரம் – ஆகியவைகளின் மேல் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இது இந்தியாவை உலக பொருளாதார மேடையில் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என்றும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.