ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ஹாசாரி ராம் பிஷ்னாய் (70)-சாவ்லி தேவி (68) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் சொத்துக்கள் முழுவதையும் தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு தொடர்ந்து பிள்ளைகள் அவர்களை துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் வேதனையில் உச்சத்தில் அவர்கள் சம்பவ நாளில் வீட்டில் உள்ள தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட தண்ணீர் டேங்க் அருகே உள்ள ஒரு சுவற்றில் ஒரு குறிப்பை எழுதி வைத்துள்ளனர். அது மிகவும் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. அதில் எங்களுடைய மகள்கள் மற்றும் மகன்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் தொடர்ந்து சித்திரவதை செய்கிறார்கள். எங்களுக்கு போதுமான சாப்பாடு கூட அவர்கள் தருவதில்லை.

நாங்கள் வயிற்றுக்கு சாப்பாடு கேட்டால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சை எடுக்குமாறு கூறுகிறார்கள். அவர்கள் எங்களை அடித்து துன்புறுத்தியதோடு இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் என்ற அந்த தற்கொலை குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தவர்களின் ஒரு மகன் காவல் நிலையத்தில் எங்கள் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டு எங்கள் மீது பழியை போட்டு விடுவதாக மிரட்டுவதாக ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.