
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் இருக்கும் மெட்ரிக் பள்ளியில் செம்முனி என்பவர் தாளாளராக உள்ளார். இவர் அமிர்தவள்ளி என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பள்ளியை நடத்த எழுதி கொடுத்ததாக தெரிகிறது. அமிர்தவள்ளியின் மகன் இனியவன் சித்தேரி பேரேரி புதூர் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செம்முனி பள்ளிக்கு அங்கீகாரத்தை பெற்று தராமல் இருந்தார். மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து அமிர்தவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் செம்முனி விசாரணைக்கு செல்லவில்லை. இதனால் கோபமடைந்த இனியவன் உள்பட ஆறு பேர் நேற்று சாய்பாபா கோவிலில் இருந்த செம்முனியை தாக்கி காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து சாய்பாபா அறக்கட்டளை தலைவர் பன்னீர்செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புதுப்பட்டி சுங்க சாவடியில் செம்முனியை மீட்டனர். மேலும் இனியவன் உள்பட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.