சொத்துகுவிப்பு  வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்..

2006 – 2011ல்  அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து குவித்ததாக பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக அறிவிக்கப்பட்ட தண்டனை விவரத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தலா ரூ 50 லட்சம் அபராதம் விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது..

அதோடு பொன்முடி சரணடைவதற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்தும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதாவது வரும் 22ஆம் தேதிக்குள் பொன்முடி சரணடைய வேண்டும்.. இல்லை என்றால் அவரை கைது செய்து தண்டனை அனுபவிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் முன்பே சொத்து குறித்த முழு விவரத்தை தெரிவித்திருந்தும், அதனை கருத்தில் கொள்ளாமல் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகவும் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்த பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பிற்கும், தண்டனைக்கும் இடைக்கால தடை விதித்தால் தான் சிறை செல்ல வேண்டிய சூழல் இருக்காது.

அவ்வாறு இடைக்கால தடை விதிக்கவில்லை என்றாலும் கூட தண்டனையை நிறுத்தி வைத்தால் கூட அமைச்சர் பொன்முடி சிறை செல்வதை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைய தினம் தான் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே நடைமுறைகள் எல்லாம் முடிந்த பின்னர் விசாரணைக்கு வரும். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையீடும் பட்சத்தில் உச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டால் அந்த மனு விசாரணைக்கு விரைவாக வர வாய்ப்புள்ளது.