தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதற்கிடையில் யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மே.27) கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, யானையை பிடிப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி செய்தியாளர் சந்திப்பு நடந்துகொண்டிருந்த தனியார் திருமணம் மண்டபம் அருகில் அரிசி கொம்பன் வந்ததாக தகவல் கிடைத்தது. இதன் காரணமாக செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே திருமண மண்டப கதவு பூட்டப்பட்டது. அதன்பின் யானை திரும்பி சென்ற பிறகு அமைச்சர் திருமண மண்டபத்திலிருந்து வாகனத்தில் சென்றார். தேனி கம்பம் நகரில் அரிசி கொம்பன் நடமாட்டத்தை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் யானை துரத்தியதால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.