
செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் செய்து விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டசபையில் பேசிய அவர், உணவை சுகாதாரமாக சமைத்து இருந்தாலும் அதனை பொட்டலம் இடுவதற்கும் பரிமாறுவதற்கும் அச்சிடப்பட்ட செய்திகளை பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் செய்வதால் அதில் அச்சிடப்பட்டுள்ள கருப்பு மையில் உள்ள பல நச்சு வேதிப்பொருட்கள் உணவில் கலந்து பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
எனவே செய்தித்தாள்களில் உணவை பொட்டலம் செய்து விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களுடைய அன்றாட உணவு முறையில், சிறுதானிய உணவு வகைகள் நன்மை குறித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்