டெல்லியில் தனியார் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா ஹோலி கலந்து கொண்டு பேசினார். அவர் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் புரட்சி தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு பலர் அச்சப்படுகிறார்கள். ஆனால் அதைப் பார்த்து அச்சப்படுவதற்கு பதில் நீதித்துறைக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும்.

நீதித்துறை தொடர்பான ஆராய்ச்சிகளை விரைந்து முடிப்பதற்கும், தேவைப்படும் தகவல்களை துரித வேகத்தில் அளிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவும். இந்த பணிகள் எளிமையானால் வழக்கறிஞர்கள் வேறு பணியில் கவனம் செலுத்த முடியும். நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம் பல்வேறு விதமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். நீதித்துறையின் செயல்பாட்டை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மாற்றினாலும் நீதியை நீதிபதிகளே வழங்குவர். மேலும் தொழில்நுட்பம் மனித அறிவினால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மனித அறிவுக்கு ஈடு இணையே இல்லை என்று கூறியுள்ளார்.