துபாயில் தனது சிறிய வயதிலேயே பவுசியா ஜாகூர் எனும் இந்திய பெண் கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளார். இந்த வாகனம் 22 சக்கரமுடையது. இதை பவுசியா ஜாகூர் சாதாரணமாக ஓட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு அமீரகத்தில் கார் ஓட்டுநர் உரிமம் பெற்றேன். அதைத்தொடர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பின் கனரக வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம் பெற முடிவு செய்தேன்.

இதில் கண் மற்றும் உடற்கூறு தேர்வின் போது அதிகாரிகள் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தனர். கண்பார்வை தேர்வுக்காக ராசல் கைமா மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது அங்கு பணியாற்றும் பெண், கனரக வாகன ஓட்டுனருக்கான கண்பார்வை தேர்வுக்கு வந்துள்ள முதல் பெண் நீங்கள் தான் என்று கூறினார். இந்த தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றேன். அதன்பின் புஜேராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேர்ந்து லாரி டிரைவராக பணியாற்றினேன்.

இதில் எனக்கு குறிப்பிட்ட ஷிப்ட் கிடையாது, நிர்வாகம் கூறும் நேரத்தில் லாரியை ஓட்டினேன். மேலும் என்னுடைய லாரியில் கல் மற்றும் மணலையும் ஏற்றி சென்று வருகிறேன். 2, 3 அச்சுகளுடைய 22 சக்கரங்கள் கொண்ட லாரியை சாலையில் ஓட்டுகிறேன். துபாயில் ஜெபல் அலி பகுதியில் இருந்து அல் குத்ரா பகுதி வரை ஓட்டியுள்ளேன்.

இதற்கிடையில் சமூக ஊடங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றேன். நான் பிறப்பதற்கு முன்பாகவே என் தந்தையை இழந்து விட்டேன்.  கடந்த ரமலான் மாதத்தில் எனது தாயாரும் இறந்துவிட்டார். இந்தியாவில் பிறந்த நான் வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். “பெண்களாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் கடினமான வேலைகளையும் செய்ய முடியும்” என்று நான் உலகத்திற்கு காட்ட விரும்புகிறேன் என்றார்.