
டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக நாம் அன்றாடம் செய்யும் சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்கப்படலாம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நடைபெறும் பெரும்பாலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ₹2,000-க்குள் நடைபெறுவதால், இந்த மாற்றம் பொதுமக்களை பெரிதும் பாதிக்கும்.
இந்த முடிவு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக உள்ளது. ஏற்கனவே மொபைல் பேமெண்ட் ஆப்கள் மற்றும் டிஜிட்டல் வாலெட்டுகள் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்து வரும் நிலையில், இந்த வரி விதிப்பு மக்களை மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு தள்ளும் அபாயம் உள்ளது.
இந்த முடிவு குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த முடிவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள GST கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.