சென்னையில் 81% பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாடா 1எம்.ஜி ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத்துறை தலைவர் பிரசாந்த் நாக் கூறியதாவது, நாடு முழுவதும் 27 நகரங்களில் டாடா 1 எம்.ஜி ஆய்வகம் சார்பாக 2.2 லட்சம் பேரிடம் வைட்டமின் டி விகிதத்தை அறியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 76 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 79 சதவீதத்தினர், பெண்கள் 75 சதவீதத்தினர் ஆகும்.

அதிலும் குறிப்பாக  25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களிடையே 84 சதவீதம் பேருக்கு இந்த வைட்டமின் டி சத்து இல்லை. நகரங்களுக்கு இடையேயான ஒப்பீட்டில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் வதோதராவில் 89 சதவீத பேருக்கும், சென்னையில் 81% பேருக்கும், சூரத்தில் 88 சதவீதம் பேருக்கும் இந்த குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறைபாடு உள்ளவர்களுக்கு வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, மனநலம், எலும்பு நலம், சிதைவு போன்றவை பாதிக்கப்படுகிறது. இதன் மூலமாக மன அழுத்தம், சர்க்கரை நோய், விரைப்பை, முடக்குவாத பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் சருமத்தில் சூரிய ஒளி படுவதை உறுதி செய்வதுடன் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வபோது மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.