தமிழ் திரையுலகின் டாப் ஸ்டாரான நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார், சென்னையில் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சிவகார்த்திகேயன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கார் முன்னால் சென்ற மற்றொரு காரின் பின்புறம் பலமாக மோதியது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கார்கள் சேதமடைந்ததால் இரு தரப்பு டிரைவர்களுக்கும் இடையே நடுரோட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், சலசலப்பும் நிலவியது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் இறுதிக்கட்டப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அந்தப் பணிகள் தொடர்பாக அவர் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்தில் சிவகார்த்திகேயனுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்ற தகவல் வெளியான பிறகுதான் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
