சென்னையிலிருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்திய அதிகாரிகளால் தேடப்படும் சந்தேக நபர் தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கையையடுத்து, கொழும்பு விமான நிலையத்தில் விரிவான பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மே 3 ஆம் தேதி காலை 11:59 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு கொழும்பு வந்த விமானத்தில் பஹல்காம் பகுதலில் தொடர்புடைய தீவிரவாதி பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது..

இதனால் அந்த விமானம் தரையிறங்கியதும், இலங்கை விமானப்படை மற்றும் விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை முற்றுகையிட்டனர். பயணிகள் மற்றும் பணியாளர்களை விமானத்தில் இருந்து இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றபின், விமானம் முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. விமானத்தின் உள்ளக பாகங்கள், பயணிகள் இருக்கைகள் என அனைத்தும் சோதனைக்குட்பட்டது. இதில் எந்தவிதமான வெடிகுண்டு அல்லது அபாயக் கருவி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சோதனையின் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அடுத்த பயணமாக இருந்த கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த UL 308 விமான சேவை  தாமதமாகியது. விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிலர் தாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில் பாதுகாப்பு காரணமாக காத்திருப்பது அவசியம் என்பதை விமான நிறுவனம் விளக்கியது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில், “பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கான முதன்மை. உயர்ந்த பாதுகாப்பு தரங்களை பின்பற்றி செயல்படுவதே எங்களது கடமையாகும்,” என தெரிவித்துள்ளது. மேலும்‌ பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தற்போது தீவிரவாதி ஒருவர் விமானத்தில் தப்பி சென்றதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.