உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 27 வயது புகைப்படக் கலைஞர் ஆலோக் குப்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து வந்த அவர் திடீரென காணாமல் போன நிலையில், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் ஆலோக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் வீசப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலோக் காணாமல் போனது தொடர்பான விசாரணையில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் முக்கியத் தடயமாக அமைந்தன. அதில் 3 பேர் பெரிய நீல நிறப் பையுடன் செல்வது பதிவாகியிருந்தது. இதனிடையே ரேவா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்ட தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது. இரு சம்பவங்களையும் இணைத்து விசாரணை நடத்தியபோது, ஆலோக்கின் நண்பர்களான சுபம் திவாரி, சுபம் யாதவ் மற்றும் அங்குஷ் யாதவ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணையின்படி, ஆலோக்கிற்கும் சுபம் திவாரிக்கும் இடையே பணம் தொடர்பாக தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க விரும்பாததால் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பிறகு சடலத்தை பெரிய நீல நிறப் பையில் வைத்து காரில் எடுத்துச் சென்று ரேவாவில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆலோக்கின் விலை உயர்ந்த புகைப்படக் கருவிகள் மற்றும் ஐபோனும் எடுத்துச் செல்லப்பட்டதாக மற்றொரு விசாரணைத் தகவல் தெரிவிக்கிறது.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சிகரமான பகுதியாக, ஆலோக் கொலை செய்யப்பட்ட பிறகும் அவரது காதலிக்கு அவரது ஐபோன் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 20 நாள்கள் வரை ஆலோக் உயிருடன் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அவரது நண்பர் ஒருவர் அவரது பெயரில் சமூக வலைதளத்தில் உரையாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் காதலி காணொலி அல்லது குரல் அழைப்பில் தொடர்புகொள்ள முயன்றபோது அவை ஏற்கப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் மின்னணு தடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், மூவரையும் கைது செய்துள்ளனர்.