அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் கொடி, சின்னம் மற்றும் பிற சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் காவல் நிலையத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையங்களில் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு இந்தப் புகாரை அளித்துள்ளனர்.
அந்தப் புகார் மனுவில், “செங்கோட்டையன் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டார். எனவே, அவர் இனிமேல் கட்சியின் சின்னத்தையோ, கொடியையோ அல்லது அ.தி.மு.க.வுடன் தொடர்புடைய எந்தவொரு அடையாளத்தையும் பயன்படுத்தக் கூடாது” என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீறிப் பயன்படுத்தினால் அவர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முக்கியப் பிரமுகர் நீக்கப்பட்டதையடுத்து, அவர் மீது உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
