அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சியில் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது, கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் ராஜினாமா கடிதம் அனுப்பியதோடு, மேலும் 2000 நிர்வாகிகள் ஒருங்கிணைந்தே அதிமுகவிலிருந்து விலகியுள்ளனர். இதன் தாக்கம் கட்சிக்குள் அதிருப்தி அலைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை பெண்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகையிட்டு, “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதே நேரத்தில், அதிமுக பிரிவினையை சரி செய்ய வேண்டும் எனக் கோரி 10 நாட்கள் அவகாசம் வழங்கிய செங்கோட்டையனுக்கு, கோவை மாவட்ட ஓபிஎஸ் அணியினர் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். மேலும், செங்கோட்டையனுடன் நேரில் சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
