வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறிய நிலையில் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் குறிப்பாக சென்னையில் 40 கிலோ மீட்டர் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

அதன்பிறகு தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறிய அளவிற்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை களத்தில் இறங்கியது. அதன்படி 30 பேர் கொண்ட 11 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மக்களை காக்க தயார் நிலையில் இருக்கிறது. மேலும் இன்று புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.