தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தற்போது திமுகவுக்கு போட்டியாக அதிமுகவும் புதிய பிரச்சார லோகோவை வெளியிட்டுள்ளதோடு பாடலையும் வெளியிட்டுள்ளனர். அதாவது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் நான் எப்போதும் மக்களுடன் பயணிக்கிறேன் எனது சுற்றுப்பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற பெயரில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. அதோடு பிரச்சார பாடலும் அதிமுக ஐடி விங் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் தற்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்ப்பது போன்ற பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

மேலும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே வீடு வீடாக பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை தொடங்க இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டிகள் நிலவ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.