ஜம்மு காஷ்மீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவானது.

ஆரம்பத்தில் மறைமுக நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்தியா, பின்னர் “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் நேரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய 9 தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது.

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்தியா அவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வெற்றிகரமாக முறியடித்தது.

இந்நிலையில், துருக்கி, பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு வழங்கி, அதற்கு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியதும், அடுத்த அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் பாகிஸ்தானுக்கு அஜர்பைஜானும் ஆதரவை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, இந்திய சுற்றுலா பயணிகள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்ல கூடாது என முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக நடந்து கொண்டதையடுத்து, இந்திய திரை உலகமும் இரு நாடுகளிலும் ஷூட்டிங் எடுக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அனைத்து மொழித் திரைத்துறையினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த நாடுகளுக்கான சுற்றுலா வருவாயிலும் கோடிக்கணக்கில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.