
உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ரபுபுரா பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் வீட்டிற்குள் ஒரு இளைஞர் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டபோது, சீமா மற்றும் அவரது கணவர் சச்சின் “சூனியம் செய்தார்கள்” எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சீமாவின் வளர்ப்பு சகோதரரும் வழக்கறிஞருமான ஏ.பி. சிங், இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்புடைய சதி இருக்கலாம் எனக் கூறிய வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஏ.பி. சிங் வெளியிட்ட வீடியோவில், “இந்த தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றால், அவர் தனியாக ஒரு வீட்டுக்குள் புகுந்து தாக்குவது சாத்தியமல்ல. சீமாவை கொல்வதற்காக பாகிஸ்தானிலிருந்தே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம்” எனக் கூறியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் சூனியம் செய்ததாக கூறியதும், அதனை நம்பி நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சீமா ஹைதர் தற்போது சனாதன தர்மத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் என்றும், இந்து மதத்தில் சூனியம் அல்லது மூடநம்பிக்கைக்கு இடமில்லை என்றும் ஏ.பி. சிங் கூறினார். “சீமாவுக்கு அரசு மற்றும் காவல்துறையின் மீது நம்பிக்கை உள்ளது. இளைஞர் சூனியம் குறித்து பேசி, சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்” என்றார். இது தொடர்பாக காவல்துறையும், மத்திய அரசும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்புவது சமூகத்தில் பீதியை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். “சமூக ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்திற்காக இருக்கட்டும், அதை சமூகத்தைப் பிளக்கும் கருவியாக மாற்றக்கூடாது. மூடநம்பிக்கையை ஆதரித்து செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். நம் சமூகம் அறிவுடைமையுடன் செயல்பட வேண்டும்” என ஏ.பி. சிங் கூறினார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.