கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்த குற்றத்திற்காக சிவராமன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிவராமன் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே ஒரு பிரச்சனையில் எலி மருந்து குடித்து  தற்கொலைக்கு முயற்சி செய்திருந்த நிலையில் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றிருந்தார்.

இவர் தற்போது உயிரிழந்த நிலையில் அவருடைய தந்தையும் நேற்று இரவு நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது சந்தேகமாக இருப்பதாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதாவது வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில்தான் சிவராமனையும் அவருடைய தந்தையையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக கூறினார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உண்மைகள் அனைத்தையும் வெளியில் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியும் சிவராமன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். அதாவது எலி மருந்து சாப்பிட்டு சிவராமன் இறந்ததாக கூறப்படும் நிலையில் அவர் முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறி விடுவார் என்ற பயத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக எடப்பாடி பழனிச்சாமியின் கூறியிருந்தார். அதோடு சிவராமன் மற்றும் அவரின் தந்தை மரணம் காவல்துறையினரின் நாடகமா என்றும் கேட்டிருந்தார்.

இப்படி எதிர்க்கட்சிகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிவரும் நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று அறிவித்துள்ளார். அதாவது வருத்தம் கேட்டு அவர் தனக்கு கடிதம் எழுதியதாகவும் பாய்சன் சாப்பிட போவதாக கூறியிருந்ததாக கூறினார். மேலும் சிவராமன் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.