சிவகங்கை மாவட்டத்தில் மன்னார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில்  மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் வானதி வரவேற்று பேசியுள்ளார். இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவியாளர் ரத்தினவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரராகவன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விழாவில் கலெக்டர் கூறியதாவது, புத்தக வாசிப்பினை மக்கள் இயக்கமாக உருவெடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு என அரசாணை பிறப்பித்து பொதுமக்களிடம் வாசிப்பு மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த 11 நாட்கள் சிவகங்கை புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடைபெற்று உள்ளது. இதில் அமைச்சர் பெரிய கருப்பன் 4 அரசு பள்ளிகளுக்கு தலா  ஐம்பதாயிரம் விதம் மொத்தம் 2 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். அதேபோல் சிதம்பரம் எம்.பி ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களை அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதேபோல் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளைச் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களது ஊராட்சியின் சார்பில் நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளன. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நன்கொடையாளர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மாவட்டத்தில் 400 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நூல்களை இந்த புத்தகத் திருவிழாவின் மூலம் வழங்கியுள்ளனர். பாபா சி நிறுவனத்தின் சார்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக விழாவில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. ஆனால் இந்த வருடம் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.5 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புத்தகம் விற்பனை நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.