கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (15). இவர் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது வாணாபுரம் புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்புறம் 17 வயது சிறுவன் ஒருவர் வேகமாக ஓட்டி வந்த பைக் திடீரென விஷ்ணுவின் சைக்கிள் மீது மோதியுள்ளது. அதனால் தூக்கி வீசப்பட்ட விஷ்ணுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாணவனை சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பைக்கை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.