விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் சிறுமியின் வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால், போலீஸ் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு தனியார் பள்ளியின் அலட்சியமே காரணம் என்று கூறப்படும் நிலையில் தற்போது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் சங்கம் ஒரு முக்கிய சுற்றரிக்கையை அனுப்பி உள்ளது.

அதாவது தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து உயர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக ஜனவரி 10ஆம் தேதி ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உயிரிழந்த குழந்தைக்கு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.