மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள ஷிரூர் தாலுகா (Shirur Tehsil) பகுதியில், மனித – சிறுத்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 30 நாட்களில் மட்டும் மூன்று பேர் சிறுத்தைப் புலித் தாக்குதலில் பலியானதால், அப்பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளனர்.

குறிப்பாக, கரும்பு விவசாயம் அதிகமாக நடைபெறும் பிம்பர்கேட் (Pimparkhed) கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மோதல்களுக்கு மத்தியிலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அபாயகரமான, அதேசமயம் வித்தியாசமான ஒரு முயற்சியை எடுத்துள்ளனர்.

சிறுத்தையின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள, அவர்கள் தங்கள் கழுத்தில் முள் பதிக்கப்பட்ட கழுத்துப் பட்டைகளை (Spiked Collars) அணிந்துகொண்டு வேலைக்குச் செல்கின்றனர்.

சிறுத்தைப் புலியின் இயல்பு, தான் வேட்டையாடும் உயிரினத்தின் கழுத்துப் பகுதியைக் குறிவைத்துத் தாக்குவதுதான். வயல்வெளிகளில் குனிந்து அல்லது உட்கார்ந்து வேலை செய்யும் மனிதர்களைச் சிறுத்தைகள் எளிதில் தாக்கும் என்பதால், இந்த முள் பதிக்கப்பட்ட காலர்கள் உயிரைப் பாதுகாக்க உதவும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

வனத்துறையின் அதிகாரி ஒருவர், “சிறுத்தையின் முதல் தாக்குதல் வீணாகிவிட்டால், அது விலகிச் சென்றுவிடும். இந்த ஸ்பைக் காலர் கழுத்தைப் பாதுகாப்பதுடன், சிறுத்தையையும் காயப்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள சலங்கைச் சத்தம் சிறுத்தையைப் பயமுறுத்தி விரட்டவும் உதவும்” என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்துகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து, கோபமடைந்த கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.