பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வருகிறது. அந்தச் சூழலில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அளித்துள்ள பேட்டி சர்வதேச ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர், “இந்தியா, பாகிஸ்தானை ராணுவ ரீதியாக தாக்கினாலும் அல்லது சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினாலும், பாகிஸ்தான் வழக்கமான ஆயுதங்களால் அல்ல, அணு ஆயுதங்களாலும் பதிலடி கொடுக்கும்.

இந்தியா தாக்குதலுக்கு தயாராக உள்ளது என்பதற்கான பல ரகசிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. இந்தியா பாகிஸ்தானின் சில பகுதிகளை குறிவைக்கும் திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் எங்களிடம் உள்ள ஆவணங்களில் வெளியாகியுள்ளது,” என்று தெரிவித்தார்.

மேலும், “சிந்து நதி ஒரு சர்வதேச நதியாக இருப்பதால், அதை தடுத்து நிறுத்துவது அல்லது அதன் வழியை மாற்றுவது போர் நடவடிக்கையாகவே கருதப்படும். அப்போது, பாகிஸ்தான் முழு சக்தியுடன் பதிலளிக்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அணு ஆயுதம் கொண்ட நாடுகள் என்பதாலும், நிலைமை பதற்றமடையாமல் தடுக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்த்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகள் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மிகவும் பதற்றமாகி இருக்கின்றன. பாகிஸ்தான் தூதரின் அணு ஆயுத மிரட்டல், உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.