தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சோழபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு சித்திரை திருவிழா ஆண்டு தொடரும் விமர்சையாக நடைபெற்று வரும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 13-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இந்த நிலையில் இந்தாண்டிற்கான திருவிழாவின் போது 108 இளநீர் மற்றும் 210 பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்று அம்மனுக்கு ஒன்பது வகை அபிஷேகளுடன் பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். அந்த கிராமத்தில் ‘சேற்று திருவிழா’ என்ற வினோதமாக வழக்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சேற்றுத் திருவிழா வழக்கத்தை விட மிக அதிகமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சேற்றுத் திருவிழாவின் போது ஆண்களும் ,சிறுவர்களும் தங்கள் உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டும் கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டும் ஊரில் உள்ள கண்மாயில் தொடங்கி கிராமம் முழுவதும் சுற்றி விட்டு கடைசியில் கோயிலை வந்து சேர்வர்.

இந்த ஆண்டு நடைபெற்ற சேற்று திருவிழாவின் போது 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மேல தாளங்களுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டத்துடன் கிராமத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர்.