நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 250 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்கள் பில் சால்ட் (46), விராட் கோலி (28) ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.
மத்திய வரிசையில் கேப்டன் ரஜத் பட்டிதர் 19 பந்துகளில் 48 ரன்கள் (6 சிக்சர்கள்) விளாச, டிம் டேவிட் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 25 பந்துகளில் 8 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவிக்க, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற மலைக்கவைக்கும் இலக்கை எட்டியது.
கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். சஞ்சு சாம்சன் (9), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (7), ஆயுஷ் மாத்ரே (1) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இந்த இக்கட்டான நிலையில் சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இறுதியில் பிரசாந்த் வீர் (43), ஜேமி ஓவர்டன் (37) ஆகியோர் போராடியும் இலக்கை எட்ட முடியவில்லை. சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
நேற்றைய போட்டியில் 250 ரன்கள் குவித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை பெங்களூரு படைத்தது.
இதற்கு முன் சிஎஸ்கேவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
பஞ்சாப் கிங்ஸ்: 231 ரன்கள் (2014)
குஜராத் டைட்டன்ஸ்: 231 ரன்கள் (2024)
மேலும் இந்தச் சாதனையை முறியடித்துள்ள ஆர்சிபி, நடப்புத் தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
