சிஎஸ்கேயில் விளையாட விரும்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்..

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான சுனில் கவாஸ்கர் எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். 73 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் வீரர் ஆவார். 1983 உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான அணியில் முக்கிய வீரராகவும் இருந்தார்.

1971 இல் இந்தியாவுக்காக அறிமுகமான கவாஸ்கர், எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் விளையாடிய நாட்களில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் பிரபலமான வடிவமாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் அதன் ஆரம்ப ஆண்டுகளில் இருந்தது. டி20 கிரிக்கெட் மிகவும் பின்னர் வந்தது. முதல் டி20 2005ல் நடந்தது.எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 2007ல் அறிமுக டி20 உலக கோப்பையை வென்றது.அதன் பின் 2008ல் ஐபிஎல் துவங்கியது.

இந்நிலையில், நடப்பு சீசனில் வர்ணனையாளராக இருக்கும் கவாஸ்கரிடம், ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறீர்கள் என்று சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை குறிப்பிட்டார். ஏனென்றால் கவாஸ்கர் மும்பையை சேர்ந்தவர். அவர் தனது சொந்த ஊர் அணிக்காக விளையாட விரும்புவதால் இது ஒரு வெளிப்படையான தேர்வாகும்.

மும்பை இல்லையென்றால் எந்த அணி அவருக்கு விருப்பமான தேர்வாக இருந்திருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்வு செய்து தனது தேர்வுக்கு 2 காரணங்களை கூறியுள்ளார். “மும்பை இந்தியன்ஸ், வேறு எந்த அணியாக இருக்க முடியும்?. மற்றபடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன். அதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதலில், அதன் உரிமையாளர்கள் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள். சீனிவாசன் கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்.

இரண்டாவது பெரிய காரணம் எம்எஸ் தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அவர் எப்படி அணிக்கு கேப்டனாக இருக்கிறார் என்று பார்ப்பது. களத்தில் இருப்பது போல் டிரஸ்ஸிங் ரூமிலும் அமைதியாக இருக்கிறாரா?
யாராவது ஒரு கேட்சை விட்டுவிட்டால் அல்லது யாரோ ஒரு பீல்டரை பேக்அப் செய்யாதபோது அவர் அமைதியை இழக்கிறாரா? அதைத்தான் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். ஐபிஎல்லில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு கவாஸ்கர் இவ்வாறு கூறினார்.