
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனசரகங்கள் உள்ளது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்வது வழக்கம்.
அதேபோன்று சிறுத்தையும் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. ஆனால் இப்போது கரடி நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் ஆசனூர் சாலையோரம் நீண்ட நேரமாக ஒரு கரடி சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திற்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்தி விட்டனர்.
சிறிது நேரமாக சாலையில் சுற்றித்திரிந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றபின்பே வாகன ஓட்டிகள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது, ஆபத்தான கரடி சாலையில் சுற்றி திரிந்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் வனப்பகுதி அருகே வாகனத்தை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.