நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மைசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட காரில் 7 வாலிபர்கள் ஹென்னகவுடனஹள்ளி- கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கொள்ளு செடிகளை அறுத்து சாலைகளில் காய வைத்திருந்தனர். அதன் மீது காரை ஓட்டி சென்ற போது கொள்ளு செடிகள் காரின் சக்கரங்களுக்குள் சிக்கி திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக வாலிபர்கள் காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது, நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூருக்கு வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் வாகன ஓட்டிகள கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகள் சாலைகளில் கொள்ளு செடிகளை காய வைக்கின்றனர். இது எளிதில் தீப்பிடிக்கும் என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என கூறியுள்ளனர்.