தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் யாக்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேய்ச்சலுக்காக எருமை மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். இவருடைய மாடுகள் சாலையை கடந்த போது வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் ஓட்டுனர் பலமுறை காரில் இருந்து ஹாரன் அடித்தும் விவசாயி வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு யாக்கையா செல்போனில் பேசிக்கொண்டு கார் வருவதை கூட கவனிக்காமல் நடுநோட்டில் அலட்சியமாக சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் யாக்கையா மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரசின் ஹரித்த ஹராம் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகளை விவசாயியின் மாடுகள் மேய்ந்து விட்டதாக கூறி 7500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்ததால் விவசாயி அபராத தொகையை செலுத்தியுள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து விவசாயி தாலுகா அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.