திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்களுக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளை கற்றுக் கொடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக வேறு ஒரு தனியார் பள்ளிக்கூட வேனில் 28 மாணவ மாணவிகள், 4 ஆசிரியைகள் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை தங்கமுத்து என்பவர் ஓட்டி சென்றார்.

இந்நிலையில் பாளையங்கோட்டை தெற்கு ஹைகிரவுண்ட் ரோட்டில் மாவட்ட தொழில் மையம் அருகே சென்றபோது வேனின் அச்சு முறிந்ததாலும், பின்பக்க டயர் வெடித்தாலும் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர வாறுகாலில் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள், டிரைவர் உட்பட 28 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.