உத்திரபிரதேச மாநிலம் மதுராவில், அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றிய ரவி சர்மா என்ற நபர், 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாதத்திற்கான பயிற்சிக்காக பள்ளிக்கு வந்த ரவி சர்மா, கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக மாணவிகளை தவறாக நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஒவ்வொரு நாளும் மாணவிகளை தனிப்பட்ட முறையில் அழைத்து, மிரட்டி, ஆபாச வீடியோக்கள் காண்பித்து, வன்கொடுமை செய்து வந்தார் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் செயல்களை மாணவிகள் ஆரம்பத்தில் பயத்தால் மறைத்தாலும், பின்னர் தைரியமாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். தலைமை ஆசிரியர் ஆரம்பத்தில் புகாரை நம்பவில்லை.

ஆனால், மாணவிகளுடன் தனித்தனியாக உரையாடிய பிறகு முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து மாணவிகள், பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர் சேர்ந்து சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மொத்தம் 6 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக கையெழுத்து இட்டு புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் மாணவிகளிடம் விரிவான விசாரணை நடத்தி அவர்களின் துயரமான அனுபவங்களை கேட்டு உறுதிபடுத்தினர். பின்னர் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு ஆபாசத் தகவல் பரப்பியதற்கான தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து, பயிற்சி ஆசிரியர் ரவி சர்மாவை கைது செய்தனர்.